இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக பக்கவாதத்தால் (Stroke) பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக களனி பல்கலைக்கழகத்தின் நரம்பியல் துறை பேராசிரியர் உதய ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் தேசிய பக்கவாத சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சமூகங்களில் சுமார் 10 பேரில் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், பக்கவாதத்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை முழுவதும் தற்போது சுமார் 10 சிறப்பு பக்கவாத சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே இயங்கி வருவதாகத் தெரிவித்த பேராசிரியர், இந்த நிலைமை மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் ஒரு சிறப்பு பக்கவாத சிகிச்சைப் பிரிவையாவது அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் பதிவாகும் பக்கவாத பாதிப்புகளில் சுமார் 75 சதவீதமானவை, மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் உருவாகும் இஸ்கீமிக் பக்கவாதம் (Ischaemic Stroke) எனப்படும் பாதிப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பக்கவாத நோயாளர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே உரிய சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை வசதிகள் பல மருத்துவமனைகளில் போதுமான அளவில் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இலங்கையில் பக்கவாத சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்தி, நோயாளர்களுக்கு விரைவான மற்றும் தரமான சிகிச்சைகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பேராசிரியர் உதய ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!