கொழும்பில் நேற்று (நவம்பர் 26) நடைபெற்ற ‘வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்’ என்ற தொனிப்பொருளிலான தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
சில தொழிற்சங்கங்கள் எத்தனை வேலைநிறுத்தங்களை முன்னெடுத்தாலும், அவற்றின் கோரிக்கைகள் நியாயமற்றவையாக இருந்தால் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தீர்வுகளை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பாக விளக்கமளித்த ஜனாதிபதி, அரசின் மொத்த வருமானம் 6,230 பில்லியன் ரூபாயாகவும், மொத்த செலவினம் 7,035 பில்லியன் ரூபாயாகவும் உள்ளதாகத் தெரிவித்தார். இதனால் 805 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் வருமானம் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கடன் மீளச் செலுத்துதல் உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்றும், இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செலவுகளை மேலும் அதிகரிக்க வேண்டுமானால் மேலதிக கடன்களைப் பெற வேண்டும் அல்லது ஏனைய செலவுகளைக் குறைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதேவேளை, மூலதனச் செலவினங்களுக்காக 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மாத வருமானம் 162,500 ரூபாயைத் தாண்டும்போது PAYE வரி அறவிடப்படுவதாகவும், மாதச் சம்பளமாக 433,000 ரூபாய் பெறுபவர் 36% வரி விகிதத்திற்கு உட்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வரி விலக்கு வரம்பை 500,000 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகரிப்புகள் இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான சம்பளத் திருத்தங்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தை அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கும் நிலையில் மட்டும் வைத்திருக்காமல், பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!