இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் (IPL) மினி ஏலத்தில் பங்கேற்க தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி கோவாவில் நடைபெறவுள்ள வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் ஆர்யவீர் சேவாக், தனது அடிப்படை விலையை 30 லட்சம் ரூபாயாக நிர்ணயித்துள்ளார்.
அண்மையில் ஓமானில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு ஆர்யவீர் முக்கிய பங்காற்றியிருந்தார்.
இத்தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 90.25 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 361 ஓட்டங்களை குவித்த அவர், தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராகத் திகழ்ந்ததுடன், 'தொடர் நாயகன்' (Player of the Tournament) விருதையும் வென்றிருந்தார். குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தார்.
ஆர்யவீர் சேவாக்குடன் U-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் நாயகன் மோஹித் உல்வாவும் 30 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் ஏலத்திற்குப் பதிவு செய்துள்ளார்.
அதேவேளை, ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட் மற்றும் U-19 அணித்தலைவர் லக்ஷ்ய ராய்சந்தானி ஆகியோர் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பையில் ஆர்யவீர் சேவாக் வெளிப்படுத்திய அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்து, எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் அவரை வாங்குவதற்கு அணிகளிடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!