அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் கடுமையான புயல் மற்றும் மோசமான வானிலை நிலவி வருவதால், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
மேலும், 9 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் தினமான (Thanksgiving) விடுமுறையை முன்னிட்டு மக்கள் பெருமளவில் பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தப் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக் காலத்தில் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அமெரிக்க போக்குவரத்துத் துறைச் செயலாளர் சீன் டஃபி, அமெரிக்க விமானப் போக்குவரத்தின் “சூப்பர் பவுல்” என வர்ணித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி சக்திவாய்ந்த புயல் நகர்ந்து வருவதாகவும், குறிப்பாக வேர்ஜீனியா பகுதியில் மணிக்கு 70 முதல் 80 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேரிலாந்து மாநிலத்தின் மொன்ட்கோமெரி கவுண்டியில் இருவர் மற்றும் மெக்கானிக்ஸ்வில்லில் ஒரு பெண் என மூவர், பெரிய மரங்கள் வீடுகளின் மீது விழுந்ததைத் தொடர்ந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், நியூயார்க் நகரில் நடைபெறவிருந்த பிரபலமான Macy’s Thanksgiving Day Parade அணிவகுப்பு, புயல் காரணமாக சனிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி, கடுமையான புயல் தாக்கக்கூடும் என எச்சரித்துள்ளதுடன், பலத்த காற்றினால் மரக்கிளைகள் மற்றும் மின்சாரக் கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலப் பயணங்கள் நடைபெற்று வரும் நிலையில், புயல் பாதிப்புகளால் அமெரிக்காவின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!