நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், தனது தங்கை அஞ்சனாவின் திருமண நிகழ்வில் கணவர் உமாபதி ராமையா இல்லாமல் கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவரது திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஆதாரமற்ற தகவல்கள் பரவி வந்தன.
இதனைத் தொடர்ந்து, தனது மகள் குறித்து முன்வைக்கப்படும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடிகர் அர்ஜுன் தற்போது குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனது இளைய மகள் அஞ்சனாவின் திருமணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்த யூகங்கள் மற்றும் விவாதங்களில் தலையிடுவதைத் திட்டமிட்டே தவிர்த்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், விருப்பத்திற்கேற்ப வாழும் சுதந்திரமும் இருப்பதாகவும், ஐஸ்வர்யா விரும்பினால் தனது தரப்பு விளக்கத்தை அவரே வழங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், தனது மகளின் குணநலன்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிவைத்து ஆதாரமற்ற, இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதை இனியும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்துவதும், இழிவான கருத்துகளைப் பரப்புவதும் பொறுப்பற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதற்காக யார் வேண்டுமானாலும் ஆதாரமற்ற கதைகளை உருவாக்கிப் பரப்புவதற்கும், ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதற்கும் உரிமை கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தங்களது மௌனத்தை இத்தகைய செயல்களுக்கு ஒப்புதல் அளிப்பதாகக் கருதக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அர்ஜுன், தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் அதிகாரிகளிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது மகளுக்காக மட்டுமன்றி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படும் அனைத்துப் பெண்களுக்காகவும் குரல் கொடுக்கும் வகையில் அர்ஜுனின் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
வாசகர் கருத்துக்கள் (0)
இச்செய்திக்கு இன்னும் கருத்துக்கள் எதுவும் பதிவிடப்படவில்லை. முதலாவதாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்!